President Message

President Message

வணக்கம்

1998 ஆம் ஆண்டு தென்னிந்திய சங்கமாக ஆரம்பிக்கப்பட்டு, பிறகு முத்தமிழ் சங்கமாக உருவாகிய நமது சங்கத்திற்கு வயது 10.

இன்றளவிலும் நமது சங்கத்திற்கு மற்ற தென்னிந்திய சங்கங்களுடன் கலாச்சார அடிப்படையிலும், மனதளவிலும் நல்ல ஒரு இணக்கமான சூழ்நிலை வளர்ந்து வருகிறது. இதுபோன்ற, நமது பண்பாட்டினை காக்கும் ஓர் அமைப்பினை ஏற்படுத்திக் கொடுத்த, பழகுவதற்கு இனிமையானவரும், பெரும்தன்மை படைத்தவருமான சங்கத்தின் முதல் தலைவர் திரு.ஆனந்த் சிவக்குமார் அவர்களுக்கு இந்த தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நம் முத்தமிழ் சங்கம் கடந்து வந்த பாதையை சற்றே பின்னோக்கி பார்க்கிறேன். இன்று நம் சங்கம் என்ன நோக்கத்துடன் செயல்படுகிறதோ அதே நோக்கத்தில் தான் தென்னிந்தியர்கள் சங்கமும் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் மற்ற மொழி பேசுபவர்களைவிட தமிழ் மொழி பேசுபவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர். தமிழர்கள் தம் கலாச்சாரத்தையும், மொழியினையும் காத்திட தமிழ் பள்ளி ஆரம்பிக்க எண்ணிய வேளையில், ஒன்றுபட்ட தென்னிந்தியர்கள் எனும் ஓர் சமுதாயம் படைக்க எண்ணியிருந்த நண்பர்களால் தமிழுக்கு மட்டும் ஒரு பள்ளி எனும் எண்ணம் மறுக்கப்பட்டது. எண்ணிக்கையில் அதிகம் இருந்த தமிழர்களால் தங்களது லட்சியத்தை எட்டமுடியாமல் போனது.

இந்நிலையில் தென்னிந்தியர்களின் வருகை அதிகமாகிய காரணத்தினாலும் அவரவர் தங்கள் இன மக்களுடன் நலன்விரும்பி, இணக்கமாகி அதுவே சுகமாகி போன காரணத்தினால் தென்னிந்தியர்கள் சங்கம் கலைக்கப்பட்டு முத்தமிழ் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழர்களுக்கென்று ஓர் சங்கம் காணும் வேளையில் அதன் பெயராக, தமிழர்களின் அடையாளமான இயல், இசை, கூத்து எனும் மூன்று தமிழும் கலந்து முத்தமிழ் சங்கம் எனும் பெயர் பெற்றதில் பெருமை கொள்கிறோம்.

என்னுடைய ஆசை, எண்ணம், குறிக்கோள் என்னவென்றால், இந்த நியூசிலாந்து நாட்டினை புகுந்த வீடாக கொண்டு வாழும் தமிழர்கள் அனைவருக்கும் முத்தமிழ் சங்கம் எனும் ஓர் குடையின்கீழ் முத்தமிழ் சங்கம் எனும் ஆலமரத்தின் விழுதுகளாக வேண்டும் என்பதே. நம் தாய்நாடு " தமிழ் நாடு " என்பதில் எள் அளவிலும் மாற்றமில்லை; அதே நேரத்தில் முத்தமிழ் சங்கம் என்பது நாம் அனைவரும் ஒன்று சேரும் இடமாக நம் கலாச்சாரத்தை வளர்க்கும் ஒரு நிலையமாக, நம் செம்மொழியினை வளர்க்கும் ஒரு பள்ளியாக, "தமிழ் இல்லமாக" வளர வேண்டும். Land of Long white clouds என்று போற்றப்படும் இந்த நாட்டில் இது சாத்தியமே. நாம் அனைவரும் அக்குறிக்கோளை அடையும் பாதையினை நோக்கி அடிமேல் அடியெடுத்து வைக்க வேண்டும். இன்று ஆரம்பிக்கவில்லை என்றால் பிறகு என்று?

உங்களுக்கு தெரிந்ததுதான், கடந்த காலத்தினை சிறப்பானதாக மாற்றகூடிய சக்தி நம் எவருக்கும் கிடையாது. ஆனால் எதிர்காலத்தினை வண்ணமயமாக, ஒளிமயமாக மாற்ற நம்மால் முடியும். இதனால்தான் பல நாடுகள் கடந்து நம் குடும்பத்துடன் இந்த நாட்டிற்கு வந்துள்ளோம். நம்மிடையே பல் வேற்றுமைகள் இருக்கலாம், ஆனால் அதையெல்லாம் வென்றெடுத்து, இந்த சங்கத்தின் உறுப்பினர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மொழியினையும், கலாச்சாரத்தையும் காத்திட வேண்டும் என்பதே, முத்தமிழ் சங்கத்தின் தலைவராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என் விருப்பம்.

முத்தமிழ் சங்கத்தினை முதன்மையான சங்கமாக அனைவரையும் வழிநடத்தும் ஓர் இயக்கமாக மாற்றவேண்டும் என்ற இலக்கு நோக்கி அழைத்து செல்வேன் என்று உறுதிஏற்கிறேன். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் தேவை. தருவீர்களா?

நேத்தன் சாமிநாதன்
- தலைவர் - முத்தமிழ் சங்கம்
Mr Nathan
You are here: Home President Message
Mercury PrintzAC PlusMortgage MastersAvondale LawSoundhar & ShebaRRK Foods